உலக தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த நீரஜ்சோப்ரா!!

அங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடந்ததது. இதில் நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா ஆகிய 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். 12 பேர் இதில் பங்கேற்றனர். அனைவரும் எதிர்பார்த்தப்படி நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் 88.17 மீட்டர் தூரம் எறிந்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், செக்குடியரசுவை சேர்ந்த ஜாகுப் வேட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
உலக தடகள போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நீரஜ்சோப்ரா புதிய வரலாறு படைத்தார். 40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை தங்கப்பதக்கம் பெற்றது இல்லை. நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தால் நீரஜ் சோப்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக நீரஜ்சோப்ரா கூறியதாவது:- “நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தங்கப் பதக்கம் இந்திய மக்களுக்கானது. நான் ஒலிம்பிக் சாம்பியன். தற்போது உலக சாம்பியன். தொடர்ந்து பல்வேறு துறைகளில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் பெயர் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், “நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில், “உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.