உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா; ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம்

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.
இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும். ஆனால் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 88.77மீ. தூரத்தை எட்டி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம் அடைந்தார். தகுதிச்சுற்றில் 8 மீ தாண்டி கடைசி வீரராக (12-வது நபர்) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதி சுற்றில் மூன்று முறை தாண்ட வேண்டும். இதில் சிறந்த தாண்டுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனடிப்படையில் முதல் 8 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்க வேண்டும். ஜேஸ்வின் ஆல்டிரின் முதல் இரண்டு முறை தாண்டும்போது Fouling ஆனது. 3-வது முறையாக அவரால் 7.77 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இது முதல் 8 இடத்திற்குள் வருவதற்கு போதுமானது அல்ல. கடந்த மார்ச் மாதம் 8.42 மீ தூரம் தாண்டி சாதனைப் படைத்திருந்தார் என்து குறிப்பிடத்தக்கது. ஆல்டிரின் உடன் ஸ்ரீசங்கரும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், 7.74 மீ தாண்டி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.