உலகக்கோப்பை கிரிக்கெட்: 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.
அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.