உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷியா: 7 பேர் உயிரிழப்பு

சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.
போர் 18 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷியா மீண்டும் உக்ரைன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது. இந்நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதில், மத விடுமுறையை கொண்டாட அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்த மக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 6-வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.