இஸ்ரேல் தனது தூதரகத்தை பஹ்ரைனில் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது!

மனாமா
இருதரப்பு உறவுகளை இயல்பாக்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது தூதரகத்தை பஹ்ரைனில் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.
இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி எலி கோஹென், வணிகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவை உள்ளடக்கிய பஹ்ரைன் பயணத்தின் போது இராஜதந்திர பணியை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ விழாவில் கலந்து கொண்டார்.
“நேரடி விமானங்களின் எண்ணிக்கை, சுற்றுலா, வர்த்தக அளவு, முதலீடுகள் ஆகியவற்றை அதிகரிக்க நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று (பஹ்ரைன்) வெளியுறவு அமைச்சரும் நானும் ஒப்புக்கொண்டோம்” என்று கோஹன் விழாவில் கூறினார்.
பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லதீஃப் அல்-சயானி, தூதரகத்தின் திறப்பு விழா “எங்கள் பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை குறிக்கிறது” என்றார்.
பஹ்ரைனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பான ஒப்பந்தம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடனும் கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்கள் எனப்படும் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகும்.