அவசர நிவாரண உதவி மற்றும் மீட்புக் குழுக்களை லிபியாவுக்கு அனுப்பிய எமிரேட்ஸ் அதிபர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஏராளமான இறப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்திய டேனியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளைத் தணிக்க லிபியாவின் முயற்சிகளுக்கு ஆதரவாக, அவசர நிவாரண உதவி மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை லிபியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஷேக் முகமது, லிபியா அரசுக்கும், அதன் மக்களுக்கும், இந்த துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
X இல் எமிரேட்ஸ் அதிபர் வெளியிட்ட பதிவில், “லிபியாவில் ஏற்பட்ட துயர வெள்ளத்தைப் பற்றி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம், மேலும் நாங்கள் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
கிழக்கு லிபியாவில் கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து டெர்னா நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு லிபியாவைக் கட்டுப்படுத்தும் லிபிய தேசிய இராணுவத்தின் (எல்என்ஏ) செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி, “டெர்னாவுக்கு மேலே உள்ள அணைகள் இடிந்து விழுந்ததால் பேரழிவு ஏற்பட்டது. முழு சுற்றுப்புறங்களையும் அவர்களது குடியிருப்பாளர்களுடன் கடலில் மூழ்கடித்தது” என்று ஒரு தொலைக்காட்சி செய்தி மாநாட்டில் கூறினார். மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை 5,000 முதல் 6,000 வரை என்று மிஸ்மாரி கூறினார்.