ஃபெடரல் தேசிய கவுன்சில் தேர்தலுக்கு இதுவரை 162 வேட்புமனுக் கோரிக்கைகள் வந்ததாக தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள மையங்கள், நாட்டின் நாடாளுமன்ற அமைப்பான ஃபெடரல் நேஷனல் கவுன்சிலுக்கு (FNC) போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறத் தொடங்கியுள்ளது. தேசிய தேர்தல் குழு பதிவு கோரிக்கைகளை நேரிலும் மின்னணு முறையிலும் பெற்று வருகிறது.
தகுதி வரம்புகளை பூர்த்தி செய்பவர்கள் தேசிய தேர்தல் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ, நேரிலோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 18 வரை கோரிக்கைகளைப் பதிவு செய்யலாம். பதிவுசெய்த முதல் நாளில் அனைத்து எமிரேட்ஸிலிருந்தும் மொத்தம் 162 வேட்புமனுக் கோரிக்கைகள் வந்தன. இதில் அபுதாபிக்கு 58, துபாய்க்கு 23, ஷார்ஜாவுக்கு 29, அஜ்மானுக்கு 12, உம்முல்-குவைனுக்கு 12, ரசல் கைமாவுக்கு 19, ஃபுஜைராவுக்கு 9 கோரிக்கைகள் வந்துள்ளன.
ஃபெடரல் தேசிய கவுன்சில் தேர்தலுக்கான காலக்கெடுவின்படி, தேசிய தேர்தல் குழு வேட்பாளர்களின் ஆரம்ப பட்டியலை ஆகஸ்ட் 25 அன்று அறிவிக்கும், அதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலம் உடனடியாகத் தொடங்கும். வேட்பாளர்களின் இறுதி பட்டியல் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும், அதன் பிறகு வேட்பாளர்கள் பிரச்சாரம் மற்றும் அவர்களின் தேர்தல் திட்டங்களை விளம்பரப்படுத்தலாம்.